வயநாடு:வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5வது நாளாகத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வயநாடு அருகே உள்ள முண்டகையில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளில் நடைபெறும் மீட்புப்பணிகளை மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ பதவியில் உள்ள மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று பார்வையிட்டார்.
நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கேட்டறிந்த மோகன்லால், மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தினர் பாராட்டினார். கனமழை காரணமாகக் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாடு மலைப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், முண்டக்கை, சூரல் மலை மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும், 200க்கும் மேற்பட்டோர்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படையினர், வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், "நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் தான் இந்த சம்பவத்தின் ஆழம் புரிகிறது" எனப் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மேலும், "பார்க்கும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் இன்னும் உள்ள சிக்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த மீட்புப்பணிகளுக்குப் பின்னால் உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தியா இதுவரை கண்டிராத பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. இதுவரை ஏற்பட்ட இழப்புகளை நம்மால் திரும்பப் பெற முடியாது ஆனால், இதில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் உதவ வேண்டும்" என்றார் மோகன்லால்.