புவனேஸ்வர்: ஒடிசாவின் கடலோரப் பகுதியில் இன்று (அக்.24) காலை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. மேலும் கடல் பகுதிகள் மிகவும் சீற்றமாக உள்ள நிலையில், கடுமையான சூறாவளி புயலான 'டானா' மாநிலத்தின் கடற்கரையை நெருங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி ஊடகங்களிடம் கூறுகையில், "கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் புயலானது நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிசாவின் பாரதிப்புக்கு 260 கி.மீ தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.