மண்டிபங்கா (கந்தமால்): ஒடிசாவின் மண்டிபங்கா மலைகிராமத்தில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி காலை அடி எடுத்து வைத்தபோது, அந்த கிராமம் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. கிராமத்தை சுற்றி வந்தபோது தெருவில் காணப்பட்ட ஒருவர் கூட என்னிடம்(ஈடிவி பாரத் செய்தியாளர் சமீர் குமார் ஆச்சார்யா) பேசத் தயாராக இல்லை. வெளியூர் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் அது குறித்து மகிழ்ச்சியடையவும் இல்லை. மாங்கொட்டைகளை உண்டவர்கள் மரணித்து 18 நாட்கள் கடந்த நிலையில் மண்டிபங்கா கிராமமே அமைதியாக இருந்தது. அந்த கிராமத்தின் மக்கள், நிச்சயமற்ற சிந்தனைகளில் தொலைந்து போனார்கள்.
18 நாட்களுக்கு முன்பு நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை, சூரியன் உதிப்பதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பே, மண்டிபங்காவை சேர்ந்த 8 பெண்கள் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி காட்டுத்தீ போல கந்தமால் மாவட்டம் முழுவதும் பரவியது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மாங்கொட்டையை உண்ட மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
உயிரை பறித்த மாங்கொட்டைகள்:இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவில் உணவு பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருகிறது. ஆனால் இது போன்ற இழப்பை மண்டிபங்கா கிராம ம் ஒருபோதும் சந்தித்ததில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற 20 நாட்கள் கடந்த நிலையில் கிராமமே நிலைத்த மவுனத்தால் அஞ்சலி செலுத்துகிறது. இழப்பின் யதார்த்தத்துடன் ஒத்துப்போக கிராமத்தினரின் மனம் தடுமாறுகிறது.
சோகத்தில் கிராம மக்கள் (Image credits-Etv Bharat) பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள். இப்போது கவலைகள் சூழ உள்ளனர். கண்களில் கண்ணீர் வழிய நம்மிடம் பேசிய உயிரிழந்தவர்களின் உறவினரான தாரணா பட்டாஜி,"நாங்கள் ஒன்றாக அமர்ந்திருப்போம், ஒன்றாக இணைந்து உணவு உண்ணுவோம், இணைந்தே சிரிப்போம், இப்போது இந்த இடம் சபிக்கப்பட்டதைபோல இருக்கிறது,"என்றார். கடினமான சூழல்களில் இந்த மாங்கொட்டைகளை உண்டு இந்த கிராம மக்கள் உயிர் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், இன்றைக்கு அதுவே அவர்கள் உயிரிழக்க காரணமாகி விட்டது.
தேவைப்படும்போது உண்பதற்காக மாங்கொட்டைகள் மூன்று ஆண்டுகள் வரை மிகவும் கவனமாக பாதுகாக்கப்படும். உணவு பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பல பழங்குடியின குடும்பங்களுக்கு இது உணவாக இருந்திருக்கிறது. மாங்கொட்டைகளை கழுவி, உலர்த்தி கவனமாக பாதுகாக்கப்பட்டு, அரிசி சாதம், கஞ்சியோடு சேர்த்து உண்ணப்படும். பசியைப் போக்குவதாக இருக்கும். ஆனால், அன்றைய நாள், இது போன்று பாதுகாக்கப்பட்ட மாங்கொட்டைகள் விஷமாக மாறியிருக்கிறது.
உணவு பாதுகாப்பு நடைமுறைகள் அல்லது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் மூலம் இந்த இறப்பை தடுத்திருக்க முடியுமா? அல்லது இது தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பாரம்பரிய உயிர்வாழும் நடைமுறைகளை நம்பியதன் தவிர்க்க முடியாத விளைவா? என இந்த சம்பவம் பல விடைதெரியாத கேள்விகளை எழுப்புகிறது.
இதையும் படிங்க:தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: தீர்ப்பு நாள் வெளியானது?
மண்டிபங்கா மலைகிராமத்தில் இப்போது பழங்குடியின பெணகளில் சிரிப்பொலிகள் எதிரொலிக்கவில்லை. முன்பு ஒன்றாக கூடி உணவு தயாரித்து, தங்கள் சொந்த கதைகளை பேசியபடி இருந்தவர்கள் இப்போது ஒரு விநோதமான அமைதியில் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் துயரத்தின் நிழல் படிந்திருக்கிறது. ஏதும் அறியா அப்பாவி சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கின்றான். தம்முடைய தாய் ஒரு போதும் இனி வரப்போவதில்லை என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அவன் பக்குவப்படவில்லை. தமது மனைவியை கடைசியாக எங்கு பார்த்தாரோ அந்த இடத்தை பார்த்தபடியும், மனைவியோடு உற்சாகமாக உரையாடிய பொழுதுகளை நினைத்தபடி அவரது கணவர் வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார். துயரத்துக்கும் பயத்துக்கும் இடையில் சிக்கி ஒட்டு மொத்த கிராமமும் உறைந்து இருப்பது போல காணப்படுகிறது.
காயவைக்கப்பட்ட மாங்கொட்டைகள் (Image credits-Etv Bharat) "என் குழந்தைகள், நிலபுலன்கள், உணவு தயாரிப்பது என எல்லாவற்றையும் என் மனைவி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் இல்லாமல் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை,"என்கிறார் வேதனையுடன் ஜோதாடர் பத்ரா என்பவர்.
உணவு பாரம்பரியம் தொடருமா? :தனிப்பட்ட இழப்புக்கு அப்பாற்பட்டு, மண்டிபங்காவில் நடந்த சம்பவம் ஒடிசாவின் ஒட்டு மொத்த பழங்குடியின மக்களிடம் சில கேள்விகளை எழுப்பி உள்ளது. அரிசியை பிரதான உணவாக உட்கொள்ளும் அவர்களுக்கு மாம்பழ கொட்டையை காய வைத்து உணவு பற்றாக்குறை காலங்களில் உண்பது என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த நடைமுறை மேலும் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வியை முன் வைக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கிராமத்து முதியவரான பிரவதி பட்டமாஜி, எங்களுடைய உணவு பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது எளிதல்ல. நாங்கள் வனத்தை சார்ந்து வாழ்கின்றோம். வனம் என்ன கொடுக்கின்றதோ அதை உண்கின்றோம். ஆனால், இந்த சம்பவத்துக்குப் பின்னர் எங்கள் உணவை எவ்வாறு நம்புவது என்று தெரியவில்லை," என்றார்.
இந்த தருணத்தில் அரசின் தலையீடு என்பது முக்கியமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பழங்குடியினர் நலன், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த சமூகத்தினர் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பாதுகாப்பான உணவு முறைகளை மேற்கொள்வார்களா? அல்லது அவர்கள் எதிர்காலத்தில் அதே அபாயங்களுடன் விடப்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.
மண்டிபங்காவில் சூரியன் மறைகிறது. தொடர்ந்து இந்த கிராமம் துயரத்தில் மூழ்கியிருக்கிறது. மூன்று பெண்களின் இழப்பு ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கிறது. அந்த வெற்றிடம் ஏற்படுத்திய காயம் ஆற ஆண்டுகள் ஆகலாம். ஒடிசா பழங்குடியின சமூகங்கள் சந்தித்து வரும் சவால்களில் இந்த சோகம் ஒரு கடுமையான நினைவூட்டலாக உள்ளது. அங்கே உயிர்வாழ்வது என்பது கடினமானதாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்ட ஆணையர் மட்டத்திலான விசாரணைக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக நிவாரணமாக மூன்று மாதங்களுக்கான அரிசி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், எதிர்கட்சித் தலைவர்கள் குறிப்பாக பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை, அரசு தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்போது பதில்களுக்காக, நீதிக்காக மண்டிபங்கா காத்திருக்கிறது. இது போன்ற சம்பவம் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்ற நம்பிக்கையோடும் அந்த கிராமம் உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்