By இரா.சிவக்குமார்
மதுரை: தேவதாசி மரபால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் எதிர்கொண்ட துயரத்தை கண் முன்னே காட்சிப்படுத்தும் வகையிலான நாடகத்தை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் அரங்கேற்றம் செய்ய உள்ளனர். அதுகுறித்த சிறப்புத் தொகுப்பு.
தேவதாசிகளாக விடப்பட்ட சிறு வயது பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஏமி கார்மைக்கேல் (1867-1951). அயர்லாந்து பெண்மணியான இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியரும், நடிகருமான மு.ராமசாமியால் உருவாக்கப்பட்ட இந்த நிஜ நாடகம், பிப்ரவரி 18 தொடங்கி 20-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல் என மொத்தம் ஆறு காட்சிகளாக மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. அனைவரும் வருகை தந்து காணும் வகையில் இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இனி நான் வெறும் பார்வையாளன்
இதுகுறித்து பேராசிரியர் மு.ராமசாமி கூறுகையில், 'தேவதாசி மரபிலிருந்து வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் குறித்து வாசிக்கத் தொடங்கும் போது தான், இவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஐரீஷ் பெண்மணி ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கை குறித்து நாடகம் உருவாக்கலாம் என்று முடிவெடுத்தேன். பெண்கள் பயிலும் டோக் பெருமாட்டி கல்லூரி முன்னரே எனக்கு நல்ல அறிமுகம் என்பதால், இங்கு இதனை அரங்கேற்றம் செய்யலாம் என தீர்மானித்தேன்.

பெண்கள் சமுதாயத்திலிருந்து இழிவை நீக்குவதற்காகப் போராடிய பெண்களைப் பற்றிய நாடகமாகவே இதனை உருவாக்கினோம். வகுப்பு, படிப்பு, தேர்வு என பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த நாடகத்தை மிகச் சிறப்பாக மாணவிகள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலில் ஆர்வமின்றி வந்த மாணவிகள், தற்போது மிகுந்த ஈடுபாட்டுடன் கதையின் கருவை உள்வாங்கி நடித்துள்ளனர். இந்த நாடகம் மட்டுமன்றி, இதிலுள்ள கருத்துக்களும் அவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பது தான் முக்கியமானது. இதற்காக களம் அமைத்துக் கொடுத்த தமிழ்த் துறைக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்கும் மிக்க நன்றி.

எமி கார்மைக்கேலைப் பற்றி மட்டும் பேசக்கூடிய இந்த நாடகம் முதல் பகுதி மட்டுமே. அடுத்த பகுதியில் மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் வாழ்வியல் வரலாறு இடம் பெறும். தேவதாசிய சங்காரம் என்ற இந்த நாடகம் தற்போது முழுமை பெற்றுவிட்டது. நாடகத்தின் அனைத்துக் கூறுகளும் மாணவிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டன. இனி நான் வெறும் பார்வையாளன் மட்டுமே' என்றார்.
'தேவிக்கு தாசன்கள் இல்லை'
தொடர்ந்து பேசிய கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் துறைத் தலைவர் முனைவர் கவிதாராணி கூறுகையில், 'எங்களது வேயா முற்றம் நாடக அமைப்பின் சார்பாக நிகழ்த்தப்படும் 5-ஆவது படைப்பே இந்த தேவதாசிய சங்காரம். இதன் ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் பாப்பா, முனைவர் வெண்முகில், முனைவர் ஸ்டெல்லா ஜிஜிபாய் ஆகியோர் உள்ளனர். சங்காரம் என்றால் அழிப்பது, ஒழிப்பது எனப் பொருள். தேவதாசிய முறையை அழிப்பது என்பது தான் இந்நாடகத்தின் மையக்கரு. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பெண்களுக்கு இந்த சமுதாயம் இழைத்த வன்முறையின் மற்றொரு பரிமாணத்தை இந்த நாடகம் பேசுகிறது. அதே நேரம் அதற்கு எதிராகக் குரல் கொடுத்த போராளிகளில் குறிப்பாக ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் போராட்டத்தையே பதிவு செய்கிறது. கொடுமை என்னவென்றால், தேவிக்கு தாசன்கள் இல்லை. ஆனால் தேவனுக்கு தாசிகள் இருந்திருக்கிறார்கள். இதில் தேவன் என்பது யார்? நம் சமுதாயத்தில் பல வகையிலும் ஆதிக்கம் செலுத்திய நபர்கள் தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இதற்கான ஒத்திகையின் போது நிறைய விஷயங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மதுரை மண்ணைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி என பலர் குறிப்பிட்ட இந்த மரபில் இருந்து வந்து இருக்கிறார்கள். அவர்களுக்காகப் பேசிய ஏமி கார்மைக்கேல் அம்மையாரை இன்றைய தலைமுறைக்கு அறியத் தருவதில் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்' என்றார்.
கற்பனைக்கும் எட்டாத வன்புணர்வைப் பேசும்
முதுகலை தமிழ் 2-ஆம் ஆண்டு மாணவி பிரியங்கா கூறுகையில், 'இன்றைய தலைமுறையினர் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ? அது குறித்து அவர்கள் அறிய முற்படுவதில்லை. ஆனால், எது தேவையற்றதோ? அதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நாடகத்தின் மையக்கரு நாம் பேச வேண்டியது. இது கற்பனை நாடகமல்ல. நமது கற்பனைக்கும் எட்டாத வன்புணர்வைப் பற்றி பேசக்கூடியது. பெண்கள் குறித்து பல பெருமைகளைப் பேசுகிறோம். ஆனால், தேவதாசி என்ற கொடிய மரபு நம் சமூகத்தில் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் குரலாகவே தேவதாசிய சங்காரம் பதிவு செய்கிறது. தற்போது நிறைய பேருக்கு தேவதாசி என்றால் என்னவென்றே தெரியாது. விழிப்புணர்வுடன் கூடிய நாடகமாக அவர்களுக்கெல்லாம் இந்த படைப்பு அமையும் என நம்புகிறோம். நம் வரலாற்றை நாம் பேசாமல் வேறு யாரும் பேச முடியாது? இந்தப் படைப்பில் நாங்கள் பங்கேற்றிருப்பது பெருமையாக மட்டுமல்ல, கர்வத்தையும் கொடுத்துள்ளது' என்றார்.
வித்தியாசமான அனுபவம் தரும்
ஆங்கிலத் துறையைச் சேர்ந்த கிறிஸ்டி கூறுகையில், 'ஆங்கிலத்தில் பல நாடகங்கள் செய்திருந்தாலும், தமிழில் எனக்கு இது முதல் அனுபவம். ஆகையால் இசை, பாடல் என பல்வேறு வகையிலும் மிகக் கவனமாக இயங்க வேண்டியது இருந்தது. குறிப்பாக நாடகத்தில் வரும் பழமையான இடங்களில் நமது பாரம்பரிய இசையையும், ஏமி கார்மைக்கேல் குறித்த இடங்களில் மிஷனரி பின்புலத்துடன் கூடிய மேற்கத்திய இசையையும் சிறப்பாக அமைத்துள்ளோம் என்று நம்புகிறேன். இதற்கு பேராசிரியர் மு.ராமசாமியின் வழிகாட்டுதல் கூடுதல் பலம். பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும், புரிதலையும் இந்த படைப்பு தரும்' என்றார்.