சென்னை: தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தராமல் தேசிய கல்வி கொள்கையை ஏற்குமாறு மத்திய அரசு மிரட்டுவதாக திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் மருத்துவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்படுகிறது. ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்கள் மாநில அரசின் சுயமரியாதையை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இருக்கிறது. எங்கு எல்லாம் மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை குரல் வருகிறதோ அதற்கு எதிர்வினை ஆக பேசி வருகிறது ஒன்றிய அரசு.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்திய வரலாற்றிலேயே எந்த ஒன்றிய அரசும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை தடுத்து நிறுத்தியதில்லை. பிளாக் மெயில் செய்ததில்லை. பேரிடருக்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டும் தரவில்லை. மாநில அரசு தான் இந்த சுமையை தாங்குகிறது.
ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை. 53 சமஸ்கிருத ஆசிரியர்கள், 100 இந்தி பேசும் ஆசிரியர்கள் உள்ளனர். மும்மொழி கொள்கையின் மூலம் பாட நூல்களிலேயே இந்தியை திணிப்பார்கள். இரு மொழி கொள்கையினால் தான் தமிழர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக சமூகத்திலும் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்.
ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களின் சதவீதம் 2019 ஆம் ஆண்டு 89 ஆகவும், 2024ம் ஆண்டு இது 98 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 1960 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை கணக்கிட்டு பார்த்தால் கல்லூரிகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது.
இந்தி திணிப்பிற்கு தான் நாங்கள் எதிரானவர்கள். தமிழ்நாட்டில் இந்தி பயில விரும்பினால் ஏராளமான இந்தி பிரச்சார சபாக்கள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய பிஜேபி அரசு அரசியல் உள்நோக்கத்திற்காக கொண்டு வந்துள்ளது. இதுவரை எந்த ஒன்றிய அரசும் செய்யாத வகையில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதியை வழங்குவோம் என சொல்வது மூலமாக ஒன்றிய பாஜக அரசு பிளாக்மெயில் செய்கிறது என்றார்.