சத்தீஸ்கர்: குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஆறாவது நாளாக இன்றும் (பிப்.18) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், சத்தீஸ்கரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா போன்ற விவசாயிகள் தலைவர்கள், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் மாலை 6 மணிக்கு சந்தித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து பேரணி நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. பஞ்சாப்-ஹரியானா மாநிலத்தின் எல்லைப்பகுதியான ஷம்புவில் விவசாயிகள் தற்போது உள்ளனர். முன்னதாக, மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே நடக்க உள்ள நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் இதற்குத் தீர்வு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்த உள்ளனர். முந்தைய கூட்டங்களில் இக்குறிப்பிட்ட கோரிக்கைகளை மட்டும் அரசு தரப்பில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.