பெனாம் பென்: வெளிநாட்டு வேலை மோகத்தில் கம்போடியா அழைத்துச் சென்று சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தபட்ட 14 இந்தியர்களை அந்நாட்டு காவல் துறை உதவியுடன் இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர். இது குறித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெளிநாட்டு வேலை ஆசை காட்டி இந்திய இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு ஏஜென்சி மற்றும் இடைத் தரகர்கள் மூலம் கம்போடியா அழைத்து வரப்பட்டு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக தகவலின் பேரில் கம்போடியா அரசு விசாரிக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அதன்படி கம்போடிய போலீசார் நடத்திய விசாரணையில் வெளிநாட்டு வேலை ஆசை காட்டி இந்திய இளைஞர்களை அழைத்து வந்து அவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டு இந்தியர்களுக்கு எதிராகவே சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபட கும்பல் வற்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கம்போடியா போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 14 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இது போன்ற வேலை மோசடிகளில் சிக்கிய 650 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய தூதரகத்தில் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கப்பட்ட 14 இந்தியர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.