மறுபிறவி போல் இருந்தது; ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்டவரை மீட்ட இளைஞர்கள்! - tamil news
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரகு. இவர் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மெயின் அருவி அருகே நண்பர்களுடன் சுற்றிப் பார்த்துவிட்டு அருவியில் குளித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருவியிலே அடித்துச் செல்லப்பட்டார். ரகுவிற்கு நீச்சல் தெரிந்ததால் சுமார் 100 மீட்டர் தூரம் நீச்சல் அடித்துக் கொண்டே, தொங்கு பாலத்தின் அடியில் இருக்கும் பாறையை பிடித்துக் கொண்டு ''என்னைக் காப்பாற்றுங்கள்'' என கூச்சலிட்டுள்ளார்.
இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தாமதமாக வந்ததால், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்து தலைவரின் கணவர் சரவணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிபி, ராஜ்சேகர், அரவிந்த் குமார் ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட ரகு, ’’தனக்கு நீச்சல் தெரிந்ததால் தப்பித்தேன்’’ என்றும்; ’’இது தனக்கு மறுபிறவி’’ என்றும் கூறி, ’’தன்னைக் காப்பாற்றியவருக்கு நன்றி’’ தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
இதையும் படிங்க: "செவிலியர்கள் பணி விவகாரத்தில் 'விரக்தியை நோக்கி' செல்கிறது திமுக" - ஓபிஎஸ் விளாசல்!