நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கள் குடித்து நூதன போராட்டம்!
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல தலைவர் கார்த்திசன், மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கையில் பனை ஓலை பட்டை மற்றும் பாட்டில்கள் எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த கள்ளை குடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களும் கள்ளை குடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் பெண்களை தடுக்க முயன்றனர்.
ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி, கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்து துணைத் தலைவர் உடையார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பனைமரம் அழிந்து வருகிறது. எனவே அவற்றை பாதுகாக்க தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்று கூறினார்.
இது குறித்து டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறும்போது, “டாஸ்மாக்கால் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனது மகன்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு கள் தான் வேண்டும். கள் என்பது குளிர்ந்த பானம். அதனால் கேடு ஏற்படாது. டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் சீரழிகிறது. எனவே கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று வேதனையோடு தெரிவித்தார்.
ஏற்கனவே கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் அருந்தி பலர் தமிழகத்தில் உயிரிழந்து வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடைகளை மூடுவதோடு கள்ளச் சாராயம் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார். இது போன்ற சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரியும் நெலையில் பெண்கள் கள் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வெகுவாக பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிளீச்சிங் பவுடர் ஊழல்: தருமபுரி மாஜி கலெக்டர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!