தாளவாடி அருகே உலாவரும் காட்டு யானைகள்.. பொதுமக்கள் அச்சம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 3, 2024, 11:09 AM IST
ஈரோடு: தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் புகுந்து சாலையைக் கடந்து சென்ற காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் இந்த காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இதற்கிடையே, தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள கர்நாடக வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு (ஜன.2) வெளியேறிய 5 காட்டு யானைகள், கிராமத்திற்குள் புகுந்து விவசாய விளைநிலங்களில் நடமாடின. இதையடுத்து, காட்டு யானைகள் கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், யானைகளை சத்தம் போட்டு விரட்டி அடித்தனர்.
அப்போது காட்டு யானைகள் மானாவாரி நிலங்கள் வழியாக சாலையைக் கடந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றன. இந்த நிலையில், காலை நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து நடமாடியதால், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.