கொடைக்கானலில் தண்ணீரை சுத்தப்படுத்தும் நவீன இயந்திரம்! - test run in kodaikanal
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூடும் மையப்பகுதியாக உள்ளது, கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்வர். இந்த நிலையில், ஏரியில் பல்வேறு கழிவுகள் கலந்து இருப்பதாக கூறி பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இதனை சரி செய்யும் பொருட்டு கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏரியை அழகுபடுத்தும் விதமாக 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, வேலி அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏரியில் உள்ள களைச்செடிகளை அகற்ற பிரத்யேக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ஆர்.ஓ வாட்டர் ப்யூரிஃபயர்கள் போன்று செயல்படும் ஆக்சிஜன் மீட்டர்கள் ஏரியின் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மல்டி பில்டர்கள் ஆக்சிஜனை தண்ணீருக்குள் செலுத்தி நேர்த்தியான முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
இதன் மூலம் ஏரியில் உள்ள தண்ணீர் சுத்தமாவதோடு, மாசு அடைவதும் தடுக்கப்படுகிறது. தற்போது வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆக்சிஜன் மீட்டர்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் பலம் கிடைத்தால் ஆக்சிஜன் மீட்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் .
மேலும், மாசு அடைந்துள்ள ஏரியை ஜப்பானில் இருந்து பயோ பிளாக் கற்கள் வரவழைக்கப்பட்டு தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லதுரை, துணை தலைவர் மாய கண்ணன் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.