விஜயகாந்த் மறைவு; படப்பிடிப்பு தளத்தில் இருந்து சசிகுமார், சூரி அஞ்சலி!
🎬 Watch Now: Feature Video
தேனி: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து மீண்ட அவர், டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.
அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் நேற்றைய முன்தினம் (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இதனை அடுத்து, தற்போது சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேனியில் நடைபெறும் படப்பிடிப்பு ஒன்றில் உள்ள சசிகுமார், சூரி மற்றும் படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து நடிகர் சூரி கூறுகையில், “நடிகர் விஜயகாந்த்தின் உயிரிழப்பு குறித்த துயரச் செய்தியைத் தாங்க முடியாத லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். கேப்டன் என்கிற வார்த்தைக்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் விஜயகாந்த் சார்தான்" என்று தெரிவித்தார்.