கடைக்குள் சாவகாசமாக நுழைந்து ரூ.70 ஆயிரம், விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளை! சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - வைரலாகும் செல்ப்போன் திருடும் சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video


Published : Nov 25, 2023, 8:05 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக அன்னூரி பேருந்து நிலையம் எதிர்புறம் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் காரமடையில் இருந்து கடைக்குச் சென்று பணிகளை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை மீண்டும் கடைக்குச் சென்று பார்த்த போது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வேணுகோபால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.ஐ சிவக்குமார் தலைமையிலான காவலர்கள் விசாரணையை முன்னெடுத்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வரும் மர்ம நபர்கள் இருவர், கடையில் இருந்த பொருட்களை சாவகாசமாக நோட்டமிட்டதுடன், 5க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அன்னூர் காவல்துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.