கல்லூரி மைதானத்தில் கிடந்த 2 டன் மது பாட்டில்கள்; தூய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள்!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மைதானத்தில் இரவு நேரங்களில் மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு, மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில், மற்றும் பிளாஸ்டிக் டம்பர்களையும் வீசி செல்வதாகவும், சில சமயத்தில் மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கல்லூரி மைதானத்தில் விளையாடும் கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும், காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வயதானவர்களும் மிகவும் அவதிக்குள்ள ஆவதாகவும் வேதனை தெரிவித்தனர். இதனைக் கருத்தில் கொண்டு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி மைதானத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தூய்மை செய்யும் பணியில் குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் ஒன்றிய தலைவர் சத்யானந்தம் கலந்து கொண்டனர். சுத்தம் செய்யும் போது சுமார் இரண்டு டன் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டதாக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார். முன்னாள் மாணவர்களின் செயல் கல்லூரி மாணவர்களிடையேயும், மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.