"உன்னை ஒன்னும் செய்யமாட்டேன் வாடா" - மாணவனை கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்த கலெக்டர்!
🎬 Watch Now: Feature Video
அனவரதநல்லூர் (தூத்துக்குடி): ஆய்வுக்காக வந்த மாவட்ட ஆட்சியரை கண்டு பயந்து பம்மிய சிறுவனை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அழைத்து அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளிக்கு மாணவர்கள் வருகை தரும் நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வந்து கொண்டு இருந்தனர். அப்போது பள்ளி வாசலில் வந்த மாணவர்கள் சிலர் ஆட்சியரைக் கண்டதும் திடீரென பயந்து போய் ஓடத் துவங்கினர். அப்போது இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஒரு மாணவனை பிடித்து "டேய் தம்பி இங்க வா, நான் உன்னை ஒன்னும் பண்ண போறது இல்லடா, ஏன் என்னை கண்டு பயந்து ஓடுற" என அழைத்துப் பேசினார்.
மேலும் "ஏன் வெறுங்காலில் நடந்து வர்ற... செருப்பு போடறது இல்லையா" என அந்த மாணவனிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கேட்டார். அதற்கு அந்த மாணவனோ திரு திருவென பயத்துடன் நின்று கொண்டிருக்க, செருப்பு போடவில்லை என்றால் காலில் கல், முள் போன்றவை குத்த நேரிடும் என்றும்; எனவே இனிமேல் செருப்பு போட்டு வருமாறு அந்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் செருப்பு அணிந்து பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தக்கோரி பள்ளி ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தினார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவவை அழைத்து மாவட்ட ஆட்சியர் அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.