வீடியோ: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா
🎬 Watch Now: Feature Video
திருச்சி: உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரஙகநாதர் திருக்கோயிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று (மார்ச்.2) தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் எழுந்தருளிய பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளினார். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் 'பூலோக வைகுண்டம்' என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
இந்த திருவிழா தொடங்கிய அந்நாள் முதல் நம்பெருமாள் ஹம்ச, ஹனுமந்த, கற்பகவிருட்சம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்காம் நாள் திருவிழாவின்போது, காசிக்கு போன பலனை தரும் என்று பக்தர்களால் நம்பப்படும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், எட்டாம் திருநாளான நேற்று மாலை உபய நாச்சியார்களுடன் புறப்பட்ட நம்பெருமாள் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.
பின்னர் இரவு தெப்பத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் அதிர்வேட்டு முழங்க, விண்ணைப் பிளந்த வாணவேடிக்கைகளுடன் தெப்பகுளத்தை மூன்று முறை சுற்றி வலம் வந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார். இதனைக் கண்ட, பக்தர்கள் 'ரெங்கா ரெங்கா' எனக் கோஷம் எழுப்பியபடி பரவசமடைந்தனர். மேலும், தீயணைப்பு துறையினரும் முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்தனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வள்ளிமலை முருகன் கோயில் திருவிழா: மூக்குத்தி முருகன் இசைக் கச்சேரியுடன் களைகட்டியது