வெண்டைக்காய்யின் விலை வீழ்ச்சி.. விரக்தியில் ஏரியில் வீசிய விவசாயிகள்! - trader throws ladysfinger in lake due to low rate
🎬 Watch Now: Feature Video


Published : Sep 2, 2023, 10:49 PM IST
திருப்பத்தூர்: கந்திலியை அடுத்த மாணவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வெண்டைக்காய் விவசாயிகளிடம் வெண்டைக்காயை வாங்கி சென்னை, பெங்களூர், கேரளா, உள்ளிட்ட வெளி மாநில மார்க்கெட்களில் வெண்டைக்காய் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக விவசாயிகளிடம் வாங்கப்பட்ட வெண்டைக்காயை விற்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து டன் அளவிலான வெண்டைக்காய்களை, கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் வீசியுள்ளார். மேலும் இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், "தற்போது வெண்டைக்காயின் விலை மிகவும் குறைந்துள்ளதால் எந்த மார்க்கெட்டிலும் வெண்டைக்காயை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள், விவசாயிகளிடம் தற்போதுள்ள விலை வீழ்ச்சியின் காரணமாக வெண்டைக்காயை வாங்காமல் போனால் அடுத்த முறை பயிரிடும் எந்த ஒரு காய்கறிகளையும் விவசாயிகள் வியாபாரிகளுக்கு கொடுக்க மாட்டார்கள். தற்போது வெண்டைக்காய் விலை வீழ்ச்சி தெரிந்தும் விவசாயிகளிடமிருந்து, ஒரு கிலோ வெண்டைக்காய் இரண்டு ரூபாய் என வாங்கி எங்களால் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை ஏரியில் வீசி செல்கிறோம். இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக எனக்கு மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என வேதனையுடன் தெரிவித்தார்.