விடுமுறை கொண்டாட்டம்: பெரிய கொடிவேரி நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தொடர் விடுமுறையின் காரணமாக கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அருவிபோல் கொட்டும் நீரில் குடும்பங்களுடன் உற்சாகக் குளியலிட்டு மகிழுந்து வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும்.
சுமார், 15அடி உயரத்திலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதனால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாகக் குளிப்பதற்கான சூழுலைக்கொண்டுள்ளது. இந்நிலையில், குறைந்த செலவில் கொண்டாடலாம் என்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே கொடிவேரி அணைக்கு வரத்தொடங்கினர். மேலும் அணையில் அருவிபோல் கொட்டும் நீரில் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டும், கடற்கரை போல் அமைந்துள்ள மணலில் அமர்ந்து அங்கு விற்கப்படும் பொறித்த மீன்களை வாங்கி உண்டும், பரிசல் பயணம் மேற்கொண்டும் விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பாக அணையில் குளிக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.