கோடை விடுமுறை: தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
🎬 Watch Now: Feature Video
தேனி: குமுளி அருகே உள்ள தேக்கடியில் கோடை விடுமுறையால் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்குள்ள அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏரியில் படகு சவாரி செய்வது முக்கியமான நிகழ்வாகும். உள்நாடு, வெளிநாடு எனச் சர்வதேச சுற்றுலாத் தலமாக தேக்கடி விளங்குகிறது.
தேக்கடியில் நாள் ஒன்றுக்கு 5 முறை ஏரியில் படகு சவாரி செய்வதற்குக் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலையில் 7:30, 9:30, 11:15, மதியம் 1:45, 3:30 ஆகிய நேரங்களில் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன.
படகு சவாரி செய்வதற்காகக் கட்டணம் ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் குடும்பத்தோடு தேக்கடிக்கு வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் அடர்ந்த வனப்பகுதியில் படகில் சுமார் இரண்டு மணி நேரம் உற்சாகத்தோடு சென்று அணைப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நேரில் கண்டு களித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர்.
மேலும் தேக்கடி உலக சுற்றுலா தளமாக விளங்குவதால் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தேக்கடியில் படகு சவாரி செய்வதற்காக குவிந்து வருகின்றனர்.