பக்தர்களால் திக்கு முக்காடிய திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் - Pudukottai
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 5ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் தினந்தோறும் முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (மார்ச் 13) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி இன்று காலை முதலே பக்தர்கள் பால் காவடி, பறவை காவடியோடு கோயிலுக்கு வருகை தந்து, தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் மாலை 4 மணியளவில் திருவப்பூர் அருகே உள்ள காட்டு மாரியம்மன் கோயிலில் முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்ததா பாண்டே, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் திருவப்பூர் முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.