அண்ணாமலையார் கோயிலில் 6ஆம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளித் தேரில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்! - Thirukarthikai Deepam Festival 6th Day
🎬 Watch Now: Feature Video
Published : Nov 23, 2023, 7:15 AM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாகத் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, 6ஆம் நாளான நேற்று இரவு உற்சவத்தில் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியே வெள்ளித் தேரில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதக்கூடிய ஏழாம் நாள் திருவிழா இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பஞ்சமூர்த்திகளும் தனித்தனி மரத்தேரில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்கள் காட்சியளிக்க உள்ளனர்.