அண்ணாமலையார் கோயில் 4ஆம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா; வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் வீதி உலா! - Thiru Karthigai Deepam
🎬 Watch Now: Feature Video
Published : Nov 21, 2023, 6:57 AM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (நவ.20) நான்காம் நாள் இரவு உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் இரவு உற்சவத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். குறிப்பாக விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று, திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.