சின்னமனூர் பார்சல் சர்வீஸ் குடோனில் தீ விபத்து - fire accident news in tamil
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம் சின்னமனூரில் தனியாருக்கு சொந்தமான பார்சல் சர்வீஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று (மார்ச் 7) இரவு மேகமலை இரவங்கலாரைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் வழக்கம்போல் இரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பார்சல் குவியலில் தீ பற்றி உள்ளது. இதனையடுத்து உடனடியாக சின்னமனூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த சின்னமனூர் தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே நேரம் தீ விபத்தின் போது குடோனில் இருந்த இருவரும் அதிக தீக்காயம் ஏற்பட்ட நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்பட இருசக்கர வாகனமும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.