தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: கட்டுமான பணிக்கு கல் சுமந்து சென்ற பக்தர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 29, 2023, 4:30 PM IST
தருமபுரி மாவட்டத்தின் ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்கி வரும் அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், மலையின் மீது அமைந்துள்ளது. பக்தர்கள் மலையில் உள்ள தீர்த்த நீரில் நீராடி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணியை முன்னிட்டு கட்டுமான பணிகள், கோயில் கோபுரங்கள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (அக். 29) சனிக்கிழமை பௌர்ணமி தினம் என்பதால் கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்த மலைக்கு வருகை புரிந்தனர்.
கட்டுமான பணிக்காக மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கற்களை பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று மலை உச்சியில் உள்ள கோயிலில் சேர்த்தனர். கோயில் கட்டுமான பணிக்கு கல் சுமந்து செல்வது இதனை ஈசனுக்கு செய்யும் தொண்டாக நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக பக்தர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மலையில் உள்ள ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கௌரி தீர்த்தம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.