ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலைக்கு காகித மாலை தயாரிக்கும் பணி தொடக்கம் - The work of making garland
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமர்ந்து அருள்பாளிக்கிறார் அருள்மிகு பெருங்காரையடி மீண்ட அய்யனார். கீரமங்கலம், கொத்தமங்கலம், வன்னியன்விடுதி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாக இந்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.
இத்திருத்தலம் ஆலங்குடியில் இருந்து 15 கிமீ தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 35 கிமீ தொலைவிலும், அறந்தாங்கியில் இருந்து 18 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த அய்யனார் கோயிலில் மாசி மாதம் வரும் மக நட்சத்திர தினத்தன்று நடைபெறும் இரண்டு நாள் மாசிமகத் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
மாசி மகத் திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களில் மட்டும் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து பெருங்காரையடி மீண்ட அய்யனாரை வழிபட்டு செல்வர்.
அந்த நாள்களில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட போக்குவரத்துக் கழக பனிமனைகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தக் கோயிலின் முன்னர் அமைந்திருக்கும் 33 அடி உயர குதிரை சிலை ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலையாகும்.
இந்தக் குதிரை சிலைக்கு மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரை வருடப் பிறப்பு உள்ளிட்ட தினங்களில், கிட்டத்தட்ட 70 அடி நீளம் உள்ள செண்டிப்பூ இல்லாத பூமாலையும், பிளாஸ்டிக் வர்ண மாலைகளும் பக்தர்கள் மூலம் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும். ஆனால், பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு உத்தரவையடுத்து வர்ண காகிதங்களால் கட்டப்பட்ட இராட்சத மாலைகளை வேண்டுதலாக வேண்டிக்கொண்டு, சாற்றுவது இப்பகுதி மக்களின் வழக்கமாக மாறிவிட்டது.
குறிப்பாக மாசிமகத் திருவிழாவான இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கில் இராட்சத மாலைகளை குதிரைக்கு சாற்றி பக்தர்கள் நேற்றிக்கடனை செலுத்துவர். கடந்த ஆண்டு நடைபெற்ற மாசிமகத் திருவிழாவில் 2,000-க்கும் மேற்பட்ட இராட்சத காகித மாலைகள் சாற்றப்பட்டன. அதே போல் இந்த வருடமும் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள மாசி மக திருவிழாவை முன்னிட்டு குலமங்கலத்தை சுற்றியுள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், ஆவணத்தாங்கோட்டை, பெரியாளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பூ வியாபாரிகள் இந்த காகித மாலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாசி மகத்திற்கு முன் ஒரு மாத காலம் இந்த மாலை கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள் பணிச்சுமை காரணமாக வெளியூர்களிலிருந்து மாலை கட்டுப்பவர்களை அழைத்து வந்து, பக்தர்களின் தேவைக்கேற்ப பூ மற்றும் காகித மாலைகளை கட்டி கொடுக்கின்றனர். இந்த வேண்டுதல் மாலைகளை வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஆர்டர் கொடுத்து மாசி மகத்தன்று குதிரைக்கு செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு காகித மாலை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, 6 ஆயிரம் ரூபாய் வரையும், பூமாலை ரூபாய் 8 ஆயிரத்திலிருந்து, 10 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடம் குதிரை சிலைக்கு, கிட்டத்தட்ட 3,000 காகித மாலைகள் சாற்றப்படும் அளவிற்கு ஆர்டர் வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.