நெல்லையில் தல பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! பொங்கல் சீர்வரிசையுடன் கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதிகள்! - Udayarpatti
🎬 Watch Now: Feature Video
Published : Jan 15, 2024, 2:05 PM IST
திருநெல்வேலி: தமிழர் திருநாளான பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று (ஜன.15) கொண்டாடி வருகின்றனர். திருமணமான புதுமண தம்பதிகள், முதல் வருடத்தில் வரும் பொங்கலை தலை பொங்கலாக கொண்டாடுவர். தலை பொங்கலின் போது, மணமகளின் பெற்றோர்கள் தங்கள் வசதிக்கேற்ப தன் மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து வரும் மரபு இன்றளவிலும் கடைபிடிக்கப்படுகிறது.
புதுமண தம்பதிகளுக்கு புத்தாடை, பொங்கல் வைப்பதற்கு பித்தளை பானைகள், மண்பானைகள், கரண்டி, அரிசி, சர்க்கரை, கரும்பு, காய்கறிகள், கிழங்குகள், மஞ்சள் கொத்து, மசாலா சாமான்கள் எனப் பல வகையான பொருட்களை பெற்றோர்கள் பொங்கல் சீர்வரிசை பொருட்களாக வழங்குவர்.
புது மாப்பிள்ளை, தன் மனைவி மற்றும் பெற்றோர்களுடன் அதிகாலையிலேயே மாமியார் வீட்டில் இருந்து வரும் பொங்கல் சீர் பொருட்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடுவர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டியை அடுத்துள்ள அருகன்குளம் மேலூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜா, நந்தினி புதுமண தம்பதியினர் தங்களது தல பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக தங்களது வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலங்கள் இட்டு, வீடுகளை மணம் வீசும் மலர்களால் அலங்கரித்து தயார் செய்து இருந்தனர். அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி, வீட்டு வாசலில் வண்ண கோலங்கள் மீது அடுப்புக் கட்டிகள் அடுக்கி, அதன் மீது மஞ்சள் குழை கட்டிய புதுப்பானை வைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
தலை பொங்கல் குறித்து புதுமண தம்பதியினர், கடந்த ஆண்டு வரை பொங்கல் திருநாளை தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு கொண்டாடி வந்தோம். இந்த வருடம் திருமணம் முடிந்ததால் நாங்கள் கணவன், மனைவியாக சேர்ந்து பொங்கல் வைத்தோம். இது புதுவிதமான ஒரு மகிழ்ச்சியை தந்துள்ளது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்தனர்.