தைப்பூசம் நிறைவு; பழனி முருகன் கோயிலில் தெப்பத்தேர் பவனி!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், வெள்ளித்தேர் மற்றும் தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது. தைப்பூசத்தின் பத்தாம் நாள் திருவிழாவான நேற்று (பிப்.7) பழனி தேரடியில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் தேர்ப் பவனி நடைபெற்றது. தெப்ப மண்டபத்தில் அருள்மிகு முகத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தெப்பத் தேரில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.