காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்கு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு!
🎬 Watch Now: Feature Video
சென்னை: நிதிநிலை அறிக்கையில் மாணவர்களின் பசிப்போக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறும் பொழுது, ஏழை எளிய மாணவர்களின் பசியினை போக்கும் வகையில் ஏற்கனவே அண்ணா பிறந்தநாள் ஆரம்பிக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை மேலும் தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் துவக்கப்பட்டு 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஏற்கனவே மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தால் மேலும் மாணவர்கள் அதிக அளவில் பள்ளிக்கு வருவார்கள். பள்ளிக்கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் கட்டமைப்பு மற்றும் கழிப்பறை வசதிகளுக்காக 1500 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் திட்டங்களைத் தீட்டி கட்டமைப்பு வசதிகளை மட்டும் உருவாக்கி விட்டுச் செல்லாமல் அரசு பள்ளிகளில் நிரந்தர பணியாளர்களாகத் துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவரப்படும் என்ற அறிவித்தல் தொகுப்பு புதிய காலத்தை காலமுறை ஊதியத்தில் பணிக்காலமாக அறிவித்தல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்குச் சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்களின் கோரிக்கை இடம்பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எனவே இந்த சட்டமன்ற கூட்டத்துடன் முதலமைச்சர் விதியின் 110 ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.