இனி தஞ்சை பெரிய கோயிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், 'பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாவட்டம்' என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனடிப்படையில், இன்று (மார்ச்.10) புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் வளாகம் 'நெகிழி இல்லா பகுதி' என்று அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 'நெகிழி இல்லா பகுதி' என பெரியகோயில் வளாகத்தை அறிவித்தார். இதில், பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பெரியகோயில் வளாகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை, துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், 'பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25,000 ரூபாயும், துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10,000 ரூபாயும், சிறிய கடைகளுக்கு ரூ.1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.ய மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.