"பட்ஜெட்டில் ஏமாற்றம்; கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" - சத்துணவு ஊழியர்கள் சங்கம்! - தமிழ்நாடு பட்ஜெட் 2023
🎬 Watch Now: Feature Video
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாததால், அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத் தலைவர் கலா, பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்குவது, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவது, தற்பொழுது உள்ள 2,000 ரூபாய் ஓய்வூதியத்தை மாற்றி குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9,000 ரூபாய் வழங்குவது, பணி ஓய்வுபெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக சத்துணவு ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவது, எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி வழங்குவது, சத்துணவுத் திட்டத்தில் உள்ள 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து இந்த பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறாதது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது குறித்து முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் 20 கிலோ மீட்டர் மனிதச் சங்கிலியிலும் பங்கேற்போம். மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை நோக்கி நடத்தப்படும். முற்றுகைப் போராட்டத்திலும் பங்கேற்க உள்ளோம்.
காலை உணவுத் திட்டத்தை வரவேற்கும் நாங்கள், அதில் சுய உதவிக்குழுக்களை நியமிக்காமல் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், அரசு அதற்கான தொகையை தரவில்லை.
அரசின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து அமைச்சரிடம் எடுத்துக் கூறிய போது, எரிவாயு மானியம் உயர்த்துவது குறித்து பரிசீலனையில் இருக்கிறது. பட்ஜெட்டில் சத்துணவு பணியாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லுக்கான ஆதாரவிலை குறித்த அறிவிப்பு இல்லை - தஞ்சை விவசாயிகள் கவலை!