‘காவிரி நதிநீர் பிரச்னையை தமிழகம் சட்டப்படி எதிர்கொள்ளும்’ - அமைச்சர் துரைமுருகன்!
🎬 Watch Now: Feature Video
Published : Aug 24, 2023, 10:08 PM IST
வேலூர்: காட்பாடி அடுத்த அம்முண்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நிழற்குடையையும், ஆரியமுத்து மோட்டூரில் பகுதிநேர நியாய விலைகடையையும் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆக.24) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேகதாது அணை விவகாரமாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற அமர்வை நாட உள்ளதாக அறிகிறோம். அவ்வாறு அவர்கள் உச்ச நீதிமன்ற அமர்வை நாடுவதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும்.
உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி, நாங்கள் தமிழ்நாட்டுக்கு உரிமையான தண்ணீரை மட்டுமே கேட்கிறோம். ஆனால், சுமார் 50 டிஎம்சி தண்ணீர் பற்றாகுறையாக உள்ளது.
தண்ணீர் இல்லாத காலத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவுகள் உள்ளது. அதனை காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு தெளிவுபடுத்த தவறியதாலேயே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணமாகும். காவிரி நீர் தொடர்பாக 17 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் ஒருமுறைகூட மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்தாத கர்நாடக அரசு முதன்முறையாக தற்போது அந்த வார்த்தையை கூறுகிறார்கள்.
கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை என்றால் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துகொள்ளலாம். அதனை விடுத்து தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி எதிர்கொள்ளும். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மைசூர் மாண்டியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்துவது அரசியல்" என்றார்.