Chandrayaan-3: சந்திரயான் வெற்றி.. கோவையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2023, 10:55 PM IST
கோவை: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதைக் காணும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அவற்றைத் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் நேரு கல்வி குழும வளாகத்தில், சந்திரயான்-3 நிலவில் இறங்குவதைத் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி வளாகத்திலிருந்த திரையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதையடுத்து மாணவ, மாணவிகள் தேசியக் கொடிகளுடன் கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். பின்னர் கல்லூரி தாளாளர் கிருஷ்ணகுமார் சந்திரயான்-3 ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி மாணவ மாணவிகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இதே போன்று கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தன்னார்வ அமைப்புகள் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். இதேபோன்று கோவை நகரின் பல்வேறு இடங்களில் சந்திரயான்-3ன் வெற்றியைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.