மதுரை: கடந்த நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி பாம்பன் ரயில் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய ரயில்வே வாரிய செயலாளருக்கு அவர் பல்வேறு பரிந்துரைகளை அனுப்பியிருந்தார்.
அதில் குறிப்பாக அவர், 'தற்போதைய பாலம் மோசமான முன்னுதாரணத்தின் அடிப்படையில் திட்டமிடுதலில் இருந்து செயலாக்கம் வரை வெளிப்படையான குறைபாடுகளை கொண்டுள்ளது எனவும் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புகளால் (RDSO) பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப லிப்ட் ஸ்பான் கர்டர் கட்டமைக்கப்படவில்லை' என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், 'உலகின் மோசமான இரண்டாவது கடல் அரிப்புச் சூழலை கொண்ட பாம்பன் புதிய பாலத்தில் அதற்குரிய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ரயில்வேயின் தவறு எனவும் தற்போதைய பாலத்தின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடிக்க தொடங்கியுள்ளன' எனவும் தமது அறிக்கையில் சௌத்ரி குறிப்பிட்டிருந்தார். மேலும் 'பாலத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கலாம்' எனவும் அவர் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் அவரது அறிக்கை பெரிதும் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தெற்கு ரயில்வே இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பாம்பன் பாலம் 2.05 கிமீ நீளமுள்ள பாலமாகும். நாட்டிலேயே தனித்துவமான 72 மீ உயரமுள்ள செங்குத்து லிஃப்ட் ஸ்பான் கொண்டது. இந்த எஃகு பாலத்தின் வடிவமைப்பு TYPSA எனும் சர்வதேச நிறுவனத்தின் ஆலோசனை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் ஐரோப்பிய மற்றும் இந்திய தயாரிப்புகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியால் இது சரிபார்க்கப்பட்டது. ரயில்வே மற்றும் RDSO மூலமூம் இந்த வடிவமைப்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மும்பை ஐஐடியும் வடிவமைப்பை சோதனை செய்து சரிபார்த்துள்ளது.
மேற்கண்ட இரண்டு ஐஐடிகளும் ஒப்புதல் அளித்த பிறகு தான் தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் இரண்டு முன்னணி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு அணுகுமுறை கர்டர்களுக்கான RDSO வடிவமைப்பில் செய்யப்பட்ட மாற்றமும் ஐஐடி மெட்ராஸ்/ஐஐடி பாம்பே மூலம் சரிபார்க்கப்பட்டு தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வெல்டிங் மற்றும் கட்டமைப்பின் செயல்திறனின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் அல்ட்ராசோனிக் சோதனை மூலம் 100% சரிபார்க்கப்பட்டது, மேலும் 100% திருச்சியில் உள்ள வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மூலம் சரிபார்க்கப்பட்டதுடன் தெற்கு ரயில்வேயின் உயர்நிலை தொழில்நுட்ப அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.
கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக, 35 வருட வடிவமைப்பு ஆயுட்காலம் கொண்ட பாலிசிலோக்சேன் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் தீவிர அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இந்த பெயின்ட் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் கட்டுமானத்தில் துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், லிப்ட் ஸ்பேனில் முழுமையாக வெல்டிங் செய்யப்பட்ட பாக்ஸ் பிரிவு, அணுகுமுறை ஸ்பான் கர்டர்களிலும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த பாலத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வழங்கியுள்ள அனைத்து ஆலோசனைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை முழுவதுமாக சீர் செய்யப்படும்' என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.