அதிமுக மாநாட்டில் கனிமொழி குறித்து அவதூறு பாடல்!.. அதிமுக பொதுச்செயலாளர் மீது திமுகவினர் புகார்! - அதிமுக பொதுச்செயலாளர் மீது திமுகவினர் புகார்
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2023, 9:49 AM IST
சென்னை: எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அதிமுக மாநாட்டின் (AIADMK conference) கலை நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பாடியதாக கூறி திமுக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவரும், திமுகவின் தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளருமான காசிராஜன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் "அதிமுக சார்பில் மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாடு நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டில் ஆடலுடன் கூடிய பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திமுக எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பாடலை பாடினார். மேலும் அந்த பாடல் கனிமொழிக்கு எம்.பி.க்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
பொதுமேடையில் பாடிய இப்பாடலை அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் ரசித்து அமர்ந்து கேட்டதால், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களான அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார், விவி ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அவர் கனிமொழி குறித்து அவதூறாக பாடியதாக" அந்த புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதனால் அவதூறாக பேச தூண்டிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்து உள்ளார். மேலும், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததாக அவர் கூறினார்.