சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! - Perambalur news
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக முதல் கால யாக வேள்வி பூஜையுடன் நேற்று துவங்கியது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில், சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய தினங்கள் மட்டும் திருக்கோயில் திறந்து இருக்கும். மற்ற நாட்களில் அருகில் உள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள் புரிவதாக ஐதீகம்.
இதனிடையே இத்திருக்கோயிலில் ஏப்.5ம் தேதி மகா கும்பாபிஷேகம் உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான முதல் கால யாக வேள்வி பூஜையோடு நேற்று துவங்கியது. கடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலையில் வந்தடைந்த பின் கும்ப அலங்கார பூஜைகளுக்குப் பிறகு பல்வேறு மூலிகை பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.