சேலம்: சேலம் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டமானது மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள், நிர்வாக அதிகாரிகள் சரியாக பணியாற்றுவதில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதாக திமுக கவுன்சிலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் அவரவர் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய 26-வது வார்டு திமுக கவுன்சிலரும், சூரமங்கலம் மண்டலக் குழுத் தலைவருமான கலையமுதன், “எங்கள் பகுதியில் முடிவு பெறாத திட்டப் பணிகளை முடிக்கப்பட்டதாக அஜெண்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக பள்ளப்பட்டி ஏரி பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியாமல் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதிகாரிகள் யாரும் சரிவர வேலை செய்வதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் பேசிய அவர், “என்ன நடக்கிறது நிர்வாகத்தில்? முதலமைச்சர் திறந்து வைத்த கட்டடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி முழுமையாக ஏற்படுத்தாமல் 8 மாதங்களாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை. பாதி வேலை நடந்து கொண்டிருக்கும் போது ஏன் சிறப்பு நிதியிலிருந்து பணம் தர வேண்டும். இதுவரை இப்படி ஒரு நிலை இருந்ததில்லை பேசாமல் ராஜினாமா செய்து விட்டுப் போய்விடலாம் என இருக்கிறேன். கேவலமாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மன்றத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி ஆளுங்கட்சியின் மூத்த கவுன்சிலர்களை வெளிநடப்பு செய்கின்றனர் என்று பேசத் தொடங்கினார். உடனே திமுக கவுன்சிலர் கலையமுதன் நான் எங்கும் வெளிநடப்பு செய்யவில்லை எனக் கூறிவிட்டு மீண்டும் இருக்கைக்குத் திரும்பி அமர்ந்தார்.
தொடர்ந்து பேசிய 43-வது வார்டு திமுக கவுன்சிலர் குணசேகரன், “சேலம் மாநகராட்சியில் புதிதாக 7 ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கட்டடங்கள் முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் முறையாக எந்த பணியையும் மேற்கொள்வதில்லை. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் யாரிடம் கேட்டாலும் சரிவர பதில் அளிப்பதில்லை. ஒப்பந்ததாரர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் பணி செய்வதற்காக ஒப்பந்தம் எடுத்துவிட்டால் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இதையும் படிங்க: “பட்ஜெட்டில் வஞ்சித்த பாஜக, அவர்களுக்கு ஆதரவான அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - உதயநிதி ஸ்டாலின்!
ஆனால், அதுபோன்ற நிலையில்லை. இதனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்து மைக்கை தூக்கி கீழே போட்டுவிட்டு, சேலம் மாநகராட்சி மேயர் இருக்கைக்கு முன்வந்து கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இவ்வாறு மாமன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வைத்துத் தொடர் குற்றச்சாட்டுகளால் கூட்டம் திகைத்துப் போன நிலையில் பின் மாமன்றக் கூட்டம் தொடர்ந்து நடத்து முடிந்தது.
இதையும் படிங்க: அங்கன்வாடி குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. சத்தம் போட்டதால் கல்லால் தாக்கிய சிறுவன்!