போக்குவரத்து ஊழியர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு! - Arcot Bus Workshop
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ஆற்காடு பேருந்து பணிமனை வளாகத்தில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் 213 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 55.05 கோடி மதிப்பிலான பணப்பலன்களைக் காசோலையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி,போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், "இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரு நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமங்களையும் இணைக்கும் வகையில் 21,000 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசு போக்குவரத்துத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய 1300 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் இலவச பயணத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 14,000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
மேலும்,தங்களது குடும்பத்தின் நலனை பாராமல் அயராது உழைப்பவர்கள் ஓட்டுநர்கள் எனவும்,கடினமான வேலை என்பதால் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குச் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் ஏற்படுவதாகவும் அதனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காகச் சேவை செய்பவர்கள் ஓட்டுநர்கள்" என புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வேகப்படுத்தும் திமுக..!; பின்னணி என்ன..?