சம்பா சாகுபடி; செங்கம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை! - விவசாயிகள் மகிழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 1:54 PM IST
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி என்பது ஆடி - ஆவணி மாதங்களில் துவங்கி, மார்கழி - தை மாதங்களில் அறுவடை செய்யப்படும் விவசாயம் ஆகும். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் மற்றும் அதன சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சம்பா நெல் நடவு செய்யப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் துவங்கிய சம்பா சாகுபடி நெல், தற்போது அறுவடைக்குத் தயாராகி, செங்கம் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு, அந்த பயிர்கள் கொள்முதலுக்காக கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் செங்கம் பகுதிகளில் உள்ள தனியார் கமிஷன் மண்டிகளில் நெல் வரத்து அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சம்பா நெல் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் எதிர்வரும் பொங்கல் விவசாயிகள் பொங்கலாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது தனியார் கமிஷன் மண்டிகளில் 500 ரூபாய் கூடுதல் லாபம் கிடைக்கும் அதே வேளையில், இப்பகுதியில் விரைவாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால், மேலும் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும், உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.