திருவாரூரில் ரேக்ளா ரேஸ்.. ஜாக்கி இல்லாமல் ஓடி வந்த குதிரை வண்டியால் பரபரப்பு!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 9:19 AM IST
திருவாரூர்: ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திருவாரூரில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் 39-வது ஆண்டாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், நேற்று காலையில் முதல் போட்டியாக கோலப்போட்டியில் துவங்கி, அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
பின்னர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தில் உள்ள யோகாம்பாள் சமேத நாகநாத சாமி கோயிலில் இருந்து ஆண்களுக்கான நீச்சல் போட்டியும், அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய போட்டியான ரேக்ளா ரேஸ் எனப்படும் குதிரை வண்டி பந்தயமும் நடைபெற்றது. இந்த குதிரை வண்டி போட்டி, நகராட்சி அலுவலகத்திலிருந்து தெற்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி வழியாக ஈரோடு 4 வீதிகளிலும் மூன்று சுற்றுகள் வீதம் நடத்தப்பட்டது.
மேலும் இந்த குதிரை வண்டி போட்டி சிறிய குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என்று 3 பிரிவுகளாக நடந்தது. அதில் நடுக்குதிரை வண்டி போட்டியில் 2வது சுற்றின் போது, ஜாக்கி இல்லாமல் குதிரை வண்டி மட்டும் ஓடி வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாக்கி கீழே விழுந்து காயமடைந்ததால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.
இந்த விளையாட்டுப் போட்டியை காண்பதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வந்ததால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.