நெருங்கும் பொங்கல் பண்டிகை.. செங்கம் பகுதிகளில் பானை தயாரிக்கும் பணி மும்முரம்!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 11:55 AM IST
திருவண்ணாமலை: செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே. அதாவது, கார்த்திகை தீபத் திருவிழாவின்போது அகல் விளக்கும், பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பானையும் தயாரித்து, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து, தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருவதாகக் கூறுகின்றனர்.
செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழை நன்றாக பெய்து, இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைப் பணிகளை முடித்து நல்ல மகசூல் பெற்ற நிலையில், நெல் மூட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருநாளில், புதுப் பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் உணவளித்து மகிழும் பொங்கல் பண்டிகைக்கு, விவசாயிகள் அதிக அளவில் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்வர் என்ற நம்பிக்கையில், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.