ரேஷன் கடையில் மக்கிய பருப்பு விநியோகம்: பொது மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு! - ranipettai district
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள பென்னகர் மேட்டு காலனி பகுதியில் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பகுதி நேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 18) மாலை அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் பருப்பு மட்டும் மிகவும் மக்கிய நிலையில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் பருப்பு வாங்க மறுத்துள்ளனர். ஆனால் நியாயவிலை கடை ஊழியர் பாபு என்பவர், கடை குடோனில் இருந்து இப்படித்தான் எங்களுக்கே வருகிறது என்றும், அதனைத்தான் நாங்கள் வாங்குகிறோம் என்றும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, பொதுமக்கள் நீண்ட நேரம் கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், அடுத்த மாதம் பருப்பு சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும், பெரும்பாலான ஏழை எளிய மக்கள் நியாய விலைக் கடையை நம்பி வாழ்ந்து வருகின்ற நிலையில், இது போன்ற தரமற்ற பொருட்களை அரசு நியாய விலைக் கடையில் வழங்கினால் யாரிடம் முறையிடுவது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.