மழைநீரில் மூழ்கிய மகளிர் காவல் நிலையம்..!
🎬 Watch Now: Feature Video
சென்னை அடுத்த பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், காவலர் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைந்துள்ளது. ஆவடி காவல் ஆணையகரத்தின் கீழ் வரும் இந்த காவல் நிலையம், தற்போது மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. காவல் நிலையத்தின் அனைத்து அறைகளிலும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால், பெண் காவலர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தினால் பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர். மேலும், காவல் நிலைய கோப்புகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தற்போது வரை எவ்வித மீட்பு பணிகளும் அங்கே நடைபெறாததாக பெண் காவலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், 250க்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பங்கள் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதால், அவர்களும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஆகையால், காவல் உயர் அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் தொற்று மீட்பு நடவடிக்கைகளை விரைவாக செய்ய வேண்டும் என காவலர்கள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.