நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தருமபுரியில் போட்டியிடும் - அன்புமணி ராமதாஸ்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த பாமக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “ஐந்து மாதங்களுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது” என்று அறிவித்தார்.
மேலும் அவர், “இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். மைக்ரோ பிளானிங் மூலமாக களப்பணி ஆற்றி, திண்ணைப் பிரச்சாரம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தனது கட்சி இந்த தொகுதியில் போட்டியிடும் என்பதைத் தமிழகத்தில் முதல் முறையாக உறுதியாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. முன்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (National Democratic Alliance) பாமக இருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கும் பாமகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. .