திருநெல்வேலி: இரவில் உலா வரும் கரடிகளால் பரபரப்பு.. வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் பீதி! - கரடி
🎬 Watch Now: Feature Video
Published : Dec 13, 2023, 6:44 PM IST
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, மிளா உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை, அவ்வப்போது மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து, விளை நிலங்களை சேதப்படுத்தியும் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றன.
கடந்த 1ஆம் தேதி கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் பாபநாசம் அடுத்த விக்ரமசிங்கபுரம் அருகில், கோட்டைவிளைப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் இணைப்பு சாலையில் உள்ள தீரன்சுடலை மாடசுவாமி கோயில் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்தன.
அதைத் தொடர்ந்து, சாலையில் சுற்றித்திரிந்த இந்த கரடிகள் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கரடி தனது குட்டியுடன் அதே பகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சுற்றி திரியும் இந்த கரடிகளால், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கரடி தாக்கியது. அதேபோல், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே, கடந்தாண்டு இருவரை கரடி மிக கொடூரமாகத் தாக்கியதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, வனத்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.