சென்னை: புத்தாண்டு பிறப்பதையொட்டி 2024 ஆம் ஆண்டில் அமைச்சரவை மாற்றம் முதல் பஞ்சு மிட்டாய்க்கு தடை வரை தமிழக அரசு சார்ந்து நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம்.
முதலீட்டார்கள் மாநாடு:
சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி முதலீடுகள் வந்து குவிந்தன. இதுவரை இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இதன் மூலம் நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேரும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேரும் வேலைவாய்ப்பினை பெறுவர் என்றும் மொத்தமாக 27 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்:
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதன் அடிப்படையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கியது.
இதனையடுத்து, அவையில் உள்ளவர்களை வரவேற்று தமிழில் பேசிய ஆளுநர், ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் படித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் தனது உரையை முடித்தார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுவதுமாக படித்தார். இதன் பிறகு, அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ஆளுநர் உரை அச்சிடப்பட்டதன் படியே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானம் குறித்து பேசத் தொடங்கையில், ஆளுநர் அரசின் உரையை புறக்கணித்து வெளியேறினார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை மாற்றம்:
பிப்ரவரியில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் இருக்கை மாற்றப்பட்டு ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் குழுமமிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
மார்ச் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:
ஜூலையில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக உள்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்த அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், தமிழகத்தின் புதிய உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டார். இதுபோன்று 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தலைமைச் செயலாளர் மாற்றம்:
ஆகஸ்ட்டில் தமிழ்நாடு அரசின் 49வது தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டு 50 ஆவது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார்.
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:
செப்டம்பரில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது சிகாகோவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன், உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவ 2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமைச்சரவை மாற்றம்:
செப்டம்பரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடைப்பெற்றது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும், முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம். நாசருக்கு தற்போது மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கொறடாவாக இருந்த கோ.வி.செழியன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்:
நவம்பரில் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு மாற்றப்பட்டு, புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மாற்றம்:
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பஞ்சு மிட்டாய்க்கு தடை:
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் , தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் எதிர்ப்பு:
நவம்பரில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது, சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.