Onam celebration: கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை..சித்தாப்புதூர் கோயிலில் சிறப்பு தரிசனம் - coimbatore onam celebration
🎬 Watch Now: Feature Video
Published : Aug 29, 2023, 12:18 PM IST
கோயம்புத்தூர்: மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 29) கோவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையையொட்டி சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மகாபலி அரசர் திருவோண நட்சத்திரத்தன்று மலையாள மக்களை காண வருவதையே "ஓணம் பண்டிகையாக" கொண்டாடி வருகின்றனர். கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம், கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கும் சூழலில், இங்கு ஏராளமான மலையாளம் பேசும் மக்கள் பணிக்காகவும் மற்றும் பள்ளிக் கல்லூரிகளுக்காகவும், இடம் பெயர்ந்து உள்ளனர். கடந்த வாரம் முதலே ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, முக்கிய நாளான, திருவோண தினமான இன்று (ஆகஸ்ட்.29) மக்கள் அதிகாலையிலேயே நீராடி, புத்தாடை உடுத்தி கோயிலில் தங்களது பண்டிகையை கொண்டாட தொடங்கி உள்ளனர். மேலும், பண்டிகையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அத்தப்பூ கோலம் , செண்டை மேளம், சிறப்பு அலங்காரங்கள் என விழாக் கோலமாக உள்ளது.
மேலும், ஓணம் பண்டிகைக்காக, கோவையில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று (ஆகஸ்ட். 29) உள்ளுர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளிலும் மக்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.