ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பை அசால்டாக பிடித்த 55 வயது முதியவர்! - thiruvarur news
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: வடபாதிமங்கலம் அருகே உள்ள மணக்கரையைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது தாயார், 6 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் 6 வயது குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது ஆறடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று சுவற்றுக்கு அடியில் உள்ள பொந்தில் நுழைந்ததை குழந்தை கவனித்துள்ளது.
இதனையடுத்து குழந்தை தனது அம்மா மற்றும் சித்தப்பாவிடம் இது குறித்து கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து மனோஜ் உடனடியாக இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ராமசாமி (55) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ராமசாமி கடந்த 40 வருடங்களாக சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் புகுந்து அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த ராமசாமி, பொந்தில் இருந்து தப்பி ஓட முயற்சித்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அப்போது பாம்பு கோபத்தில் படம் எடுத்தபடியும், சீறியபடியும் கொத்துவதற்கு முயற்சித்துள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து இந்த பாம்பை பத்திரமாக பிடித்து தனது கையிலேயே சுருட்டி எடுத்து சென்று ராமசாமி வனப்பகுதியில் விட்டுள்ளார்.