தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த முதியவர் - பல்லாவரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு! - மது போதையில் தண்டவாளத்தில் படுத்த முதியவர்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 5, 2023, 9:24 AM IST
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று (அக்.4) மாலையில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வரும்பொழுது, தண்டவாளப் பகுதியில் முதியவர் படுத்து இருந்ததை ரயில் ஓட்டுநர் பார்த்துள்ளார்.
உடனடியாக ரயிலை பிரேக் அடித்தபோது, முதியவர் படுத்து கிடந்த இடத்தைத் தாண்டி ரயில் பாதியில் நின்றது. இதைப்பார்த்து பொதுமக்கள் அலறினர். ரயிலில் இருந்து பயணிகள் கீழே இறங்கி தண்டவாளத்தின் அடியில் சிக்கிய முதியவரை மீட்டனர். நீண்ட தூரம் தவழ்ந்த நிலையில், ரயிலின் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர் மீண்டு வெளியில் வந்தார். உடனே ரயில்வே போலீசார் முதியவரிடம் விசாரித்தனர்.
அந்த விசாரணையில், அந்த முதியவர் திருமழிசையைச் சேர்ந்த ரவி (66) என்பது தெரிய வந்துள்ளது. பல்லாவரத்திற்கு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர், ரயில் ஏற வரும் பொழுது மதுபோதையில் தண்டவாளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பல்லாவரம் ரயில் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.