வள்ளிமலை முருகன் கோயில் திருவிழா: மூக்குத்தி முருகன் இசைக் கச்சேரியுடன் களைகட்டியது
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடியை அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவிழா கடந்த வாரம் முழுவதும் களைகட்டியது. இதில் கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் விஜய் டிவி பிரபலமான பாடகர் மூக்குத்தி முருகன் இன்னிசை கச்சேரியும், சாமிவேடத்தில் நடன கச்சேரியும் இடம் பெற்றிருந்தது.
மேலும் இன்று மாலை முதல் 5-ம் தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். 6-ம் தேதி காலை வேடபுரி உற்சவமும், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணமும், மாலை 5 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பிறகு 7-ம் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு அன்று மாலை ஆட்டுகிடா வாகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.