திருப்பூர்: பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் பிரசத்தி பெற்ற நகரமாக இருப்பது திருப்பூர். சுமார் 1925ஆம் ஆண்டுகளில் காதர்பேட்டையில் உள்ள நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்குவதற்கு, திருப்பூரை சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் மற்றும் சத்தார் சாகிபு ஆகியோர் சென்ற போது, கையினால் சுற்றி துணி தயாரிக்கும் இயந்திரம் மற்றும் அவர்கள் துவங்கிய பின்னலாடை நிறுவனம் தான், திருப்பூரில் தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் என திருப்பூர் வாழ் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பின்னலாடை தொழிலும் வரலாறும்: அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்த திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள், 1980களில் 50 கோடி ரூபாய் அளவுக்கு, உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. அதேபோல் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது திருப்பூரின் ஏற்றுமதி.
கோவை மாவட்டத்தில், பல்லடம் தாலுகாவில் சிறிய ஊராக இருந்த திருப்பூர், தொழிற்சாலை வளர்ச்சியால் தற்போது தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் வளர்ந்துள்ளது. இவ்வாறாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த தொழில்களான சாயமிடும் டையிங் தொழில், பிரிண்டிங் தொழில், எம்ப்ராய்டரி தொழில், ஸ்டீமிங், காம்பாக்டிங் உள்பட 95 சதவீத தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
சிக்கல் உருவாகி உள்ளது: இப்படி ஒரே ஊரில் பனியன் உற்பத்தி சார்ந்த தொழில்கள் குவிந்து உள்ளதால், திருப்பூரில் பின்னலாடை தொழில் பெரிய அளவில் வளர சாதகமாக அமைந்தது. ஆனால் தற்போது திருப்பூரின் பனியன் தொழிலுக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 82 வயதில் கருநாகக்கடி.. 107 வயதில் எள்ளுப்பேரன்களுடன் கனகாபிஷேகம் கொண்டாடிய பேச்சியம்மாள் பாட்டி!
பெரும் வருவாயை தேடி தரும் பின்னலாடைகள்: இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், “ உலக அளவில் பின்னலாடைக்கு சிறப்பு சேர்ந்த ஊர் திருப்பூர். தமிழகத்தில் திருப்பூர் பின்னலாடைகளின் ஏற்றுமதி 50 சதவீதமும், இறக்குமதி 50 சதவீதமும் என தலா 30,000 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பெரும் வருவாயை தேடி தரும் தொழிலாக இருந்து வருகிறது. உலகளவிலான அரசியல் மாற்றங்களான அமெரிக்க தேர்தல் போன்ற நிகழ்வுகள் பின்னலாடை தொழிலுக்கான புதிய ஆர்டர்கள் மற்றும் நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. நமது ஊரில் தொழிலாளர்கள் 50 சதவீதம் குறைவாக உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பின்னலாடை குறித்து அறிந்து, தொழில் கற்றுக்கொள்ள இங்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரும் தொழிலாளர்கள் வடமாநிலத்தவர்கள்: அந்த சூழல் தற்போது வெளி மாநில தொழிலாளர்கள் இன்றி தொழில் நடத்த இயலாத நிலையை உருவாக்கியுள்ளது. தற்போது வெளி மாநிலத்தவர்கள் தொழிலில் உறுதுணையாக இருப்பது போல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது. திருப்பூர் பின்னலாடை தொழில் பெரும் பின்னடைவை அடையப்போகிறது.
கற்று கொண்டு சொந்த ஊர் செல்கின்றனர்: இங்கு வந்து தொழில் கற்றுக் கொள்ளும் வெளிமாநிலத்தவர்கள் குறிப்பாக வட மாநிலத்தவர்கள். தொழில் கற்று விட்டு அவரவர் மாநிலத்தில் சிறு, குறு தொழில் தொடங்கி அங்கே இருக்கின்றனர். இதனால் இங்கு தற்காலிக தொழிலாளர்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். தற்போது கேரளாவில் புதிதாக 1000 பின்னலாடை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர்க்கு போட்டியாக மாநிலங்கள் உருவாக தொடங்கியுள்ளனர். இவ்வாறு பிற மாநிலத்தில் தொடங்கும் புதிய பின்னலாடை தொழிற்சாலைகளால் சந்தையில் திருப்பூர் பின்னலாடைக்கான வரவேற்பு குறைந்துவிடும்.
அரசு உதவி தொகை வழங்குக: இனி வருங்காலத்தில் வடமாநிலங்களான பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் இது போன்று நிறுவனங்கள் தொடங்கினால் நமது திருப்பூர் பின்னலாடையின் உள்நாட்டு வர்த்தகம் பூஜ்ஜியமாக மாறிவிடும்.
எனவே இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு தமிழக மாவட்டங்களில் பின்னலாடை தொழிலுக்கான உற்பத்தி மையங்களை தொடங்குவதற்கு உதவியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நமது உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கலாம். மேலும் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் பின்னலாடை தொடங்கினாலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தமிழக அரசு உதவி தொகை அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்